சந்தம் சிந்தும் கவிதை

ஒளவை

என்னவள்……
=============
அழகில் அவளை
அரசியாய்க் கண்டேன்
பழகியே அவளில்
பாசமும் கொண்டேன்
நிலவினைப் போல
நிம்மதி தந்தாள்
விலகிட முடியா
வீரமுடன் நின்றேன்

பருவ வயது
பளிச்சிடும் தேகம்
கருவிழி இரண்டும்
காதலைத் தூண்டும்
அருவியாய்ப் பாயும்
அவளது பார்வையில்
உருகியே வீழ்ந்தேன்
உண்மைக் காதலில்

அரும்பு மீசையில்
அலையும் இளசுகள்
தெருவோரம் நின்று
தேம்பியே பார்த்துக்
கருகிய காதலைக்
கண்ணீரால் மறைக்க
விரும்பியது கிடைத்த
வீராப்பு எனக்கு

மனதில் உன்னை
மனைவியாய் ஏற்றேன்
தினமும் காத்திடும்
தெய்வமாய் இருப்பேன்
மனையில் எனக்கு
மகாராணி நீயே
உனைத் தென்றல்
தீண்டவும் விடேன்.

ஒளவை.