சந்தம் சிந்தும் கவிதை

எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
“பெண்ணே”
காலை வெளியான
காலைக்கதிரில்
கோரக்கொலையின்
கொடுமையின் பின்னணி.
மட்டுவில் பெண்ணாள்
மகவு மூன்றுள்ளாள்
கட்டிய கணவன்
முட்டு நோயாளி
எட்டினல் வயது
எண்ணைந்தின் மேலாம்
கெட்டவன் தொடர்பு
கீழ்மை உறவு
செத்தவர் உடலம்
இட்டிடும் சுடலையில்
கூட்டிச் சென்று கொட்டினான் பெற்றோல்
உயிருடன் தீயை
உடலுக்கு ஊற்றி
கருகிச் சாக
காடையன் விட்டான்
ஊரார் கூடியும்
உயிரை மீட்டிலர்
தீயனை பொலீசில்
சேர்பித் தார்கள்
செத்த பெண்ணே!
செய்தது சரியா!
மனையில் கணவன்
மகவுகள் மூன்று
வயதுக்கு வந்த
வாலிபர் வனிதை
நினைவில் கொள்ள
நீ ஏன் மறந்தாய்?
பெண் என்றாலே
பேயும் இரங்குமாம்
மண்ணின் பெருமையை
மாசுற செய்தனை
மன்னிக்க உன்னை
மறுக்குதே நெஞ்சம்.
-எல்லாளன்-