பட்டினி
பத்தேதான் வயதான சிறுமி
பட்டினியால் துண்டுணவு திருடி
விட்டாளாம் கடை ஒன்றில் குழுமி
விளாசுகிறார் தர்ம அடி பொருமி.
சட்டை முடி பற்றி சிலர் இழுத்து
சரமாரி யாய் அடிகள் கொடுத்து
சொட்ட சொட்ட ரத்தம் கல் எடுத்து
சுற்றி நின்று எறிகின்றார் அடித்து
ஓலமிட்டு அழும் அவளோ பாவம்
உங்களுக்கேன் இரக்கமிலா கோபம்
காலம் இது வறுமையில் தாய் நாடு
கடும் பசியில் திருடியதா கேடு?
சிறுமி அவள் பசி தீர்க்கும் எண்ணம்
சிறிதுமிலா மனிதர் நீர் முன்னம்
தவறு செய்யா புனிதர் என்று கூறு
தண்டிக்க முன் என்றார் ஜேசு.
இரப்பவர்மேல் இரங்குதலே நீதி
இலங்கையிலே பசி பஞ்சம் மேவி
பறைத் தமிழன் என துவேஷம் பாடி
பழித்தவர்க்கும் பசி தீர்ப்போம் கூடி.