வியாழன் கவிதை

இரா.விஜயகௌரி

புழுதி வாரி எழும் மண் வாசம்…….

புழுதி வாரி எழும் மண் வாசம்
புனிதர் வாழ்ந்தெழுந்த உயிர் நேசம்
காலம் தொலைத்ததிந்த எங்கள் எழில் தேசம்
காத்துக் கிடத்தலிலே தொலைவாச்சே

எதனால் இழந்தோம் எம்மண் களைந்தோம்
புலம்பெயர் வாழ்வில் நமை இழந்தோம்
வாழிடம்தொலைத்து வருந்தி நாம் அழுது
மேதினி வாழ்வின் அழகிழந்தோம்

பசுமையின் தேசம் உறவுகள் நேசம்
உயிர்ப்பின் தாய் மொழி விலக்கி நின்றோம்
ஒற்றுமை எம்மிடம் இருந்திருந்தால்
அந்த இறுகிய தளையில் உயிர்த்திருப்போம்

எங்கே எங்கள்தாய்மடியோ
எங்கள் தலைமுறை விலகியதோ
பன்மொழி பயின்ற குழந்தைகளே
தமிழின் அழகினை தொலைத்தீரா

புழுதி வாரி எழும் மண்வாசம்
புனிதர்வாழ்ந்தெழுந்த உயிர்நேசம்