வியாழன் கவிதை

இரா.விஜயகௌரி

சுதந்திரமாமே…………

சுந்தர எழிலாய் சிறகு விரித்து
எல்லைகள் இல்லா தடங்களைத் தொட்டு
காற்றின் அணுக்களில் காவியம் படைத்து
வெற்றி கொள்வதே சுதந்திர மாண்பு

கொடுப்பதும்பெறுவதும் பறிப்பதும்-பின்
அடக்கியும் அடங்கியும் முடங்கியும்
முனகித்தவித்தலைவதும். இவைதாம்
அடிமைத்தளையின் ஆணவப்பிடியோ

எனக்கென உள்ள உரிமைகள் தம்மை
நானே உணர்ந்து நானிலம் தொடுகின்
தடைகளை இடவும் தாண்டிட விளைவதும்
சுதந்திரச்சிறகுகள் அரிவதன் நிலையோ

உணர்ச்சிப் பிழம்பில்உழல்வது அல்ல
உலகின் பரப்பினைஉள்வாங்கி எழுவதும்
வேரிடம் தொட்டு விரிந்து வாழ்வதும்
எண்ணம் விரிய ஏற்றம் படைப்பதும்
சுதந்திரச் சிறகதன் செறிவே என்பேன்