வியாழன் கவிதை

அமுதான தமிழ்

தமிழ் என்றால் அமுது
தமிழ் என்றால் அழகு
தமிழ் என்றால் இனிமை
அள்ள அள்ளக் குறையாத செழுமை
அள்ளிப் பருகிவிட்டால் இனிமை
எல்லைகள் கொண்ட பெருமை
எல்லையில்லாத் தொன்மை
அத்தனையும் கொண்டதே அமுதத் தமிழ் !

கால வெள்ளத்தில் நீந்தி
கரை புரண்டு ஓடி
வடவேங்கடம் தொட்டு தென்குமரி ஈறாக
கங்கை தொட்டு கடாரம் வரை பாய்ந்து
சிங்களம் தொட்டு புட்பகம் வரை
எல்லை வகுத்தது அமுதத் தமிழே !

முன்பின் என்ற வரலாற்றைத் தாங்கி
அகம் புறமென வாழ்வினைப் பிரித்து
வாழ்விற்கு இலக்கணம் வகுத்து
இலக்கியம் தந்த ஒரே மொழி அமுதத்தமிழ்
மொழிகள் எல்லாம் பிறந்தே சிறக்க
அமுதத்தமிழ் சிறந்தே பிறந்து
அரியணை ஏறியதே !