சந்தம் சிந்தும் கவிதை

-அபிராமி கவிதாசன்-

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-222
தலைப்பு !
“ கண்கண்ட தெய்வங்கள் பெற்றோரே”

தரணியாழ உயிரீந்த தெய்வங்கள் பெற்றோரே
தந்தைதாய் தந்தனரே சொந்தங்கள் மற்றோரே

வரம்தருவார் சந்ததிக்கு வாழையடி வாழையாய்
வந்தருள் புரிந்திடுவார் வாழ்வுதந்து
வேலையாய்

சிரம்தாழ்த்தி பணிந்திட சிகரமும் தொட்டிடலாம்
சிந்தையுடன் செயல்பட சிவலோகம் கண்டிடலாம்

கரம்கூப்பி வணங்கிடும் கண்கண்ட தெய்வங்கள்
காசினி கண்டிட கரைந்திடும் பாவங்கள்

நடமாடும் கடவுளாம் நம்முன்னோர் இல்லத்தில்
நாமுயர பாடுபட்டு மனம்சுவைப்பர் உள்ளத்தில்

தடமாறி நடக்கையில் திருத்திட கண்டிப்பர்
தன்சொல் மீறிட தவறாமல் தண்டிப்பார்

இடம் பொருள் பாராமல் இன்னலை போக்கிடுவார்
இரவுபகல் ஓயாமல் இருளினை களைத்திடுவார்

திடமான வாழ்விற்கு திரியாகி ஒளிதருவார்
திரவியம் தேடிட தினம்தோறும் வழிதருவார்

இல்லக் கோயிலின் இருதெய்வம் பெற்றோரே
இதயத்தில் தரிசித்து பூசிக்க கற்பீரே

செல்லக் குழந்தைகளாய் சிரித்து ரசிக்கையிலே
சொல்லால் மகிழ்வித்து சுகப்பட ருசிப்போமே

இல்லை… சொத்துசுகம் என்றபோதும் மதிப்போமே
இப்பிறப்பை சொத்தாக்கி இகத்தினில் விதைப்போமே

நல்லதோர் வாழ்விற்கு நம்பெற்றோரே குருவாக்கு
நாள்தோறும் ஒளிர்ந்து நலம்பெறும் தெய்வவாக்கு

அபிராமி ( கவிதன் )