சந்தம் சிந்தும் கவிதை

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்259.
ஊக்கம்…

வேதனையைச் சாதனையாய்
ஆக்கியவர் வரலாற்றை
ஆழ்ந்து நீ படித்தால்
அது தருமே ஊக்கம்!

ஆற்றல் பெற்றோரை
நீ நினைந்தால்
மாற்றம் படைக்க வரும்
மனத்தின் கண் தாக்கம்!
நல்ல
நோக்கம் நிறைவேற
நூறுமுறை சிந்தித்தால்
புது சாதனைகள்
புரிவதற்குச்
சற்றும் தளராத
ஊக்கம் வரும்!

நாடு படைக்க
நாளும் முயற்சித்த
ஈடு இணையற்ற
எம் தலைவர்
தற்சார்பு தேசம்
படைத்துத்
திருப்புகழை
அடைந்ததே ஊக்கம்!

என்னுயிர்
மகன் கவிதன் முயற்சிப்
படிக்கட்டில்
எட்டி நடந்து
வெற்றிகளைக்
குவிப்பதற்கே
பெற்றதாய்
நான் தருவதே
நல்லூக்கம்!

அல்லும் பகலும்
அயராது உழைத்து
இரவும் பகலும்
விழித்து
எதிரிகளின் கதை முடித்து
மாண்ட மாவீரர்
ஊக்கமே
பெரு ஊக்கம்!

பெண்ணாகப்
பிறந்ததே பெருந்துயரம்
என்று எண்ணாமல்
அன்புத் தலைவர்
கட்டளை ஏற்று
வெடிகட்டி
ஆழ்கடலில் மூழ்கி
பகைவனின்
கப்பலைச் சிதறடித்த
ஆற்றல் தங்கை
அங்கயற்கண்ணியின்
ஊக்கமே உயர்
ஊக்கம்!

அபிராமி கவிதாசன்
02.04.2024