சந்தம் சிந்தும் கவிதை

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்254

பங்குனி
…..

எங்கு நீ
சென்றாலும்
இங்கு நீ
வர வேண்டும்
என்று காத்திருப்பேன்!

அலைகடல் தாண்டி
அயல் மண்ணில்
வாழ்ந்தாலும்
சொல்வயல் உழுகும்
சொல்லேர் உழவனாய்ப்
பல்லோர் புகழும்
பார்புகழ் பாவலனாய்
என் மகன் கவிதன்
திகழ வேண்டும்
எனக் கதைத்திருப்பேன்…
சந்தம் சிந்தும்
கவிதையிலே
நெஞ்சம் புதைத்திருப்பேன்!

தங்குதடையின்றி
தமிழ் பேச வேண்டும்
என் மகன்
கவிதன் என்று
கணப்பொழுதும்
இறைவனை
வேண்டித்
தவமிருப்பேன்..!

மாசித்
திங்கள் போய்
பங்குனி 17 இல்
என் மகன் பிறந்தான்
எனும் பதிவை
பாரெங்கும்
இணைய உலகில்
உலாவரச் செய்து
இனிய இதயங்களின்
உண்மை வாழ்த்தால்
உள்ளம் உவகையில்
பூத்திருப்பேன்.
உலகம் புகழும்
ஒப்பற்ற திருக்குறளைத்
திசையெட்டும் பரப்பும்
என் மகன் கவிதனின்
குழந்தைக் குரல் கேட்டுச்
சிறகடித்து வானில்
பறந்திருப்பேன்.
என் சிற்றப்பா வாயிலாக
மழலையர் இன்புற
நல்லுணவு
வழங்கிடச் செய்திருப்பேன்.
பங்குனியே வருக!
பொங்கிடும் மகிழ்ச்சி தருக!

– அபிராமி கவிதாசன்
20.2.2024