சந்தம் சிந்தும் கவிதை

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் -253

தலைப்பு!
பிள்ளைக் கனி அமுது
…..

பிள்ளைக் கனியமுது – அதைப்
பெறுதல் தனியினிது
வெள்ளை மனத்தழகு – அதில்
விளையும் உருபுதிது!

பிஞ்சுக் கைஅசைவு – அட
பச்சைக் கிளிச்சிறகு
அஞ்சாப் புதுவரவு – பிள்ளை
அடங்காப் பெருந்துணிவு!

தவழுவும் கலைநிலவு – பிள்ளை
தமிழ்போல் தேன்பிழிவு
கவரும் விழிப்பதிவு – பிள்ளை
கரும்பாய்ச் சுவைச்செறிவு!

அரும்பின் இதழ்பொலிவு – பிள்ளை
அறிவில் வளர்தெளிவு
சுரும்பாய் அதுசுழலும் – அதைச்
சுற்றி வரமகிழும்!

பிள்ளைக் கனியமுது – அதை
வெல்வ தினிஅரிது!
துள்ளும் மொழிமழலை – அது
தொலைக்கும் நம்கவலை!

அபிராமி கவிதாசன்
13.02.2024