சந்தம் சிந்தும் கவிதை

அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு …. 19.04.2022
வாரம்-171 /
கவித் தலைப்பு !
„எதிர்ப்பு அலை“

கொத்துக் கொத்தாய் குவியல் குவியலாய்
மொத்தமாய் கொன்றழித்த கொடுஞ்செயலில் எழவில்லை…
எதிர்ப்பு அலை

பாடசாலையிலும் பதுங்குக்குழியிலும்
படர்ந்து வெடிக்கும் கண்ணிவெடிகள்
ஓடவும் கதியற்று ஒதுங்கவும் விதியற்றோம் எழவில்லை..
-எதிர்ப்பு அலை

கணவனின்றி மனைவியும்
குழந்தையின்றி தாயும்
பிணக்கைதிகளாய் உயிருண்டு உடல் உறுப்பில்லை எழவில்லை…
எதிர்ப்பு அலை

தங்குமிடமெங்கும் குண்டுமழை பொழிந்து
அங்கம் சிதறி ஓடி அயல்தேசம் தஞ்சம் அடைந்தோம் எழவில்லை..
எதிர்ப்பு அலை

ஈழத்தமிழினத்தை இழிவுசெய்து இருளில் ஆழ்த்தி
வாழவிடாது வதம்செய்த
வஞ்சக நெஞ்சத்தாரிடம் எழவில்லை…
எதிர்ப்பு அலை

எத்தனை உயிர்கள் வயிறெரிந்து விட்ட சாபமோ
மொத்தமாய் அடுப்பெரிக்க
அனலுமில்லை உணவுமில்லை

ஒய்யார உயிர்களே உனக்கு ஒன்றென்றதும் வெய்யோனாய்
எதிர்ப்பலை உலகெங்கும் ஒலிக்கிறதே

அரசன் அன்று கேட்பான் தெய்வம் நின்று தான் கேட்கும்
நிமிர்ந்து வாழும் சிந்தை தகுதியற்றோர் ஆனீர்

நன்றி வணக்கம்
அபிராமி கவிதாசன் 🙏