வியாழன் கவிதை

Thires Mariathas 02.06.2022

🌺சிறைக்
கம்பிகளுக்குச் செய்தி
தொடுப்போம்🌺
தெரிந்தோ தெரியாமலோ
அறியாத தெரியாத கட்டிளம்
பருவமதில்
பட்டியலாய்க் கட்டிக்கொண்டு
புரிந்த பாதகங்களை
எரித்துத்தள்ள ஏழோ
எட்டோ ஆண்டுகள்
மட்டாய்ப் போதாதா
வாழ்வைச் சுட்டுமீட்ட

நாசாவை நாம் எட்டியபோதும்
நாளாந்த வாழ்வை மாற்றாது
நாசகார வதை முகாம்களாய்
சித்திரவதைகளாய் தண்டனை
பதைபதைக்க வைக்கிறதே
கதைகளைப்போலவே
சிந்தைகளைச் சிதைத்து
மந்தைகளைப்போல
வதைத்து

ஆட்களையே பார்க்க முடியாது
முட்களான படுக்கை
வாழ்வை நாட்களாக்க
வெளியுலகத்தை நோக்காது
களிப்புமில்லைக் கழிக்கக்
கழிப்பிடமாயே அங்க என்றும்
அமாவாசைதான் தினமும்

சிறையது கறைபுரிந்தவர்களுக்க
மறையாய் குறைகளைக் களையத்
துறையாய் துலங்கவைத்துப்
களங்கமகற்ற வேண்டும்
களங்கமில்லாமல் மீண்டும்
கலியகற்றிப் பொலிவாய் வாழ

அறைக்குள் அவர்கள்
அடைபட்டு
உள்ளங்கள் உடைபட்டு
நடையில்லை உணவுக்கும்
உறக்கத்திற்கும் உரையாடவும்
உயரியதடையென
உணரும்போது
மடையெனக் கண்ணீர்
தண்ணீர்த் தடாகமாகிடுதே

கம்பிகளுக்குள் தம்பிகள்
தங்கைகளென தப்பை மாற்றி
வினையகற்றத் தப்பிக்காது
மெய்ப்பிக்க தேவைதான்
ஆனாலும் சின்னச்சின்ன
மன்னிக்கக்கூடியவைகளுக்கு
ஏழரைச்சனி வாட்டியதுபோல
கட்டிப்பெட்டிக்குள்ளாக்கலாமா

உள்ளுக்குள் இருப்பவர்கள்
எல்லோரும் தப்பானவர்களுமல்ல
வெளியில உலாவருபவர்கள்
அனைவரும் தப்புச்
செய்யாதவர்களுமல்ல
சிலர் பிடிபட்டுள்ளார்கள்
பலர் பிடிபடாமலுள்ளார்கள்