சந்தம் சிந்தும் கவிதை

Sakthy Sakthythasan

ஈழத்து ஓலம்

காத்தடிக்குது
கொப்புகள் ஆடுது
இலைகள் விழுகிது
மரமோ சிலிர்க்கிது

பூக்களும் உதிருது
குருவிகள் பதுங்கிது
வாழை இலைகள்
கிழிஞ்சு தொங்குது

கிடுகுக் குடிசையின்
கூரைகள் பறக்குது
மழையின் ஈரம் பட்டு
மனுசன் எழும்பிறான்

ஆடு நனையுது
அந்தரப்பட்டு ஓடுறான்
மரத்தடியில ஆட்டைக்
கட்டீட்டு பெருமூச்சு விடுறான்

மண்நில குடிசையின்
நிலம் சேறாய் மாறுது
எடியேய் நிலத்தை
மெழுகுவோம் வாடி

சத்தமாய்க் கூவி
மனுசியை எழுப்புறான்
நனைஞ்ச பாயைச் சுருட்டி
கொட்டாவியோடு எழும்பிறாள்

அப்பா நித்திரை வருகிது
சிணுங்கும் பொடியன்
மழைத்தண்ணியைப் பிடிச்சு
வாயில ஊத்திச் சிரிக்கிறான்

தேத்தண்ணிக் கடையில
ரேடியோ கத்துது
உரிமை கேட்டுத்
தலைவன் போராட்டம்

விளக்குமாத்தால் தண்ணியை
தள்ளும் மனிசி
சாரத்தை மடிச்சுக்கட்டி
கூரைக்கு கிடுகைத் தேடும் மனுசன்

விடுதலையா ? அது என்ன
விடியாத இரவின் நுனியில்
விளங்காத பெடியன்
விடிஞ்சால் வெளிக்குமோ ?

சக்தி சக்திதாசன்