Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

பொதுக்குழுவில் கட்சியினர் போல குண்டர்கள் கலவரம்? டி.ஜி.பி.,யிடம் புகார்!

கட்சியினர் போல, குண்டர்கள் கலவரம் செய்ய திட்டமிட்டு இருப்பதால், அ.தி.மு.க., பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை நிறுத்த வேண்டும்’ என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி சார்பில், டி.ஜி.பி., அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்: சென்னை, வானகரத்தில், தனியார் திருமண மண்டபத்தில், 23ல், எங்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது. அதற்கான அறிவிப்பு வெளிவந்த நாளில் இருந்து, கட்சிக்கு ஒற்றைத் தலைமை என்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

கட்சியினரிடம் பதற்றம் ஏற்பட்டுள்ளதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, குண்டர்கள், சந்தர்ப்பவாதிகள் வன்முறையை துாண்டி வருகின்றனர். எங்கள் கட்சி அலுவலகத்தில், சமூக விரோத கும்பல் ஊடுருவி தாக்குதல் நடத்தி உள்ளது. பொதுக்குழு மற்றும் செயற்குழு நடக்கும் இடத்திலும், கட்சி அலுவலகத்திலும், ஒரு லட்சம் பேர் கூடுவர். தலைவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தொண்டர்களின் உணர்ச்சி வேகத்தில், வன்முறை வெடித்து, கலவரமாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

எங்கள் கட்சியின் ஒற்றைத் தலைமை விவகாரத்தை சாதகமாக பயன்படுத்தி, ரவுடிகள் மாநிலம் முழுதும் கலவரத்தை துாண்டி, மிகப்பெரிய அளவில் சட்டம் – ஒழுங்கு பிரச்னையை அரங்கேற்ற காத்திருக்கின்றனர். அத்துடன், கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. எனவே, பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு வருகை தருவோரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதன் பின்னரே, கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும். இல்லையெனில், கூட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் அல்லது ஒத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.