சந்தம் சிந்தும் கவிதை

Vajeetha Mohamed

அர்த்தமில்லாத அமைதிகள்.

அதிகார வெறியர்கள்
அவிழ்த்து விட்ட
அளவிலாப் பொய்களை
அறிவு சார்ந்தோரும்
அறிந்தறிந்தே

அமைதி காத்து
அனுமதித்ததால்
அழகு மிகு – எம்
அன்னை நாடு – இன்று
அழகிழந்து நிற்கிறது

அனைவர் முன்பும்

இடைவெளி இன்றி
இனவெறி – அன்று
இதயங்களில்
விதைக்கையில் – இன்று
இடைவிடாது

கருத்தாடுவோர்
எங்கிருந்தனர்
அமைதிகள் – அன்று
ஆர்ப்பாரித்திருந்தால்
இளைஞர்கள் – இன்று

இரவு பகலாக
வீதிதோறும்
வீறுகொண்டு
வீரிட வேண்டியதில்லை..

அதிகார
அடக்கு முறைக்கு
அறிவும் ஆற்றலும்
தெளிவும் விளக்கமும்
அமைதி கொண்டதால்
அடுத்தடுத்து வரும் – எம்
எதிர்காலப் பரம்பரையும்

தலைகொள்ளா
கடன்சுமையால்
தலைதாழ்த்தி விழிபிதுங்கி
பசியோடு பலமிழந்து நிற்கின்றது

தரமில்லாத தலைமைத்துவத்தின்
ஊறிவிட்ட ஊழல்கள்

அர்த்தமில்லா அமைதிகளால்
அடங்கிச் சென்றதால்
அனைவரும் – இன்று
நிதியோடு நீதிகேட்டு – விழி
நீர் பெருகி
பேதலித்து நிற்கின்றனர்

அமைதி
அவரவர் அல்லலை
அகற்றிடினும்
அனைத்துக்கும் அது
அர்த்தமே இல்லை