சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீஸ்வரன்

காணி

அசையாச் சொத்து
அருமை கண்டு
அகலம் நீளம்
அகன்ற நிலத்தை
இசைந்து தந்தாள்
எனக்கு உரித்தாய்
இறக்கும் முன்னே
ஈன்றவள் விருப்பாய்

அங்கே காவலை நிகழ்த்தும்
அருகருகே நிமிர்ந்த தடிகள்

குடைவிரித்து நிழல் கொடுக்கும் மரங்கள்
குவித்தே கொடுக்கும் வளங்கள்
இடைமறிக்க
இதழை விரிக்கும் மலர்கள்
இனிய தேனை சுரக்கும்
படையோடு நிற்கும் பக்கத்தே சிட்டு
பற்றின் பறந்தோடும் இடம்விட்டு

திருட்டை நிகழ்த்த
திரளும் அணில்கள்
திகட்டா விருந்தளிக்கும் பழங்கள்

பறித்தாரே காணியை
பயத்தை ஏவி
பகையை மனதில்
பலநாள் காவி
முறியடிக்கத் திறனற்று
மூண்ட சினத்தை
மனதுள் அடக்கி
வாழுகின்றேன் கூனி

மனோகரி ஜெகதீஸ்வரன்