வியாழன் கவிதை

நேவிஸ் பிலிப்

கவி இல(68) 11/08/22
“பசி”
கொடிது கொடிது இளமையில் வறுமை
வறுமையில் கொடிது பசியினால் வாடி
ஈனமாய் கையேந்தி இரந்து உண்டு
இருப்பதை எடுக்க கையையும் நீட்டும்

வறண்ட பானையில்
சுரண்டி உண்ணும் கொடுமை
பார்க்க சகிக்காத
பாரிய பசிக் கொடுமை

பசியென்று வந்தால் பத்தும் பறந்தோடும்
கையில் பணமில்லா நிலையில்
தன்மானம் பாராது திருடவும் செய்யும்
அவமானம் கொண்டு தலை தாழச் செய்யும்

பாசமில்லா ஈனரென்றால் அடித்தே பிடித்திருப்பார்
அவர் மானம் காத்தார் நேசமே கொண்டதனால்
பிள்ளை முன் தந்தை தலை குனிய வேண்டாமே
எண்ணியே செய்தார் மனித நேயப் பண்பை

அவர் செய்கை பார்த்தோரைப் பற்றிக் கொள்ள
உபயமில்லா உள்ளப் பரிமாற்றம் நிகழ்ந்ததங்கே
மண்ணில் மனித நேயம் மடியவில்லை சாற்ற
இதைத்தவிர நமக்கு வேறேது சான்று.