சந்தம் சிந்தும் கவிதை

நாதன் கந்தையா

எது நிஜம்.
—————-

ஒரு மழைக்காலம்
வானமும் பூமியும்
ரம்மியாமாக இருந்தது
இருந்தும் ஏனோ
ஊர் முடங்கிப்போய் கிடந்தது.

தெருவெங்கும் வெள்ளம்.
இலைச் சருகு கடதாசிகள்
மல கழிவுகள்
குப்பை கூளங்கள்
சேர்ந்தாற்போல்
மழை நீர் அடித்து செல்கிறது.

வீணாப்போன மழை
கண் கடை தெரியாமல்
நாசம் பண்ணுது
ஒவ்வொருத்தரும்
முணு முணுக்கின்றனர்.

மழை நீரில் விளையாடிய
குழந்தையை பார்த்து
கழிவு நீரில்
தெம்பலடிக்காதே என்று
கடிந்து கொண்டாள் தாய்.

திரும்பி தாயிடம் வந்த
குழந்தை
நாளைக்கும் இங்கே
தண்ணீர் இருக்குமா
அம்மாவை கேட்டது.

அதொன்றும்
தண்ணீர் இங்க தங்காது
எல்லாம் குளத்துக்கு போயிடும்
சொல்லியவாறு
தாய்
குழந்தையை தர தரவென்று
இழுத்து சென்றாள்.

ஒரு மாதம் கடந்திருக்கும்
மழை இல்லை
நிலம் சுத்தமாகி
பளிச்சென்று இருந்தது.

மீண்டும் பழைய பரபரப்பு
வெய்யில்
புழுக்கம்
சருகுகள் கடதாசிகள்
தெரு முழுவதும்
சேரத்தொடங்கிவிட்டன.

ஒரு மழை பெய்தால்
நல்லாயிருக்கும்
அவிச்சல் தாங்க முடியவில்லை
தெருவில் நண்பர்கள்
பேசிக்கொள்ளுகின்றனர்.

தொடர்ந்து வெய்யில்,
குடி நீருக்கும்
குளிப்பதற்கும்
ஊர் எல்லையில் உள்ள
குளத்தை நோக்கி
மக்கள் படையெடுக்கின்றனர்.

குளத்தில் இறங்காமல்
கரையில் நின்ற
குழந்தையை பார்த்து,
முத்துபோல தண்ணி
வா
வந்து குளி என்றாள்
தாய்.

குழந்தை
தாயிடம் கேட்டது
குளத்துக்கு எப்படி அம்மா
தண்ணி வந்தது.

மழைத்தண்ணி
என்றாள் தாய்.
தாயையும் தண்ணீரையும்
திரும்ப திரும்ப பார்த்தது
குழந்தை.

குளம் கண்ணாடி
விரிப்பு போல படர்ந்து கிடந்தது
சருகு கடதாசி
மலக்கழிவு
எந்த சுவடும்
குளத்தில் தெரியவில்லை.

குழந்தைக்கு
வியப்பாக இருந்தது.