சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

வாழ்வின் கூத்து

அழுது பயனில்லை நடப்பது நடந்தேறும்
தொழுதும் பலனில்லை இல்லையிங்கு ஒருபேறும்
எழுதப்பட்ட விதிப்படியே சேர்வதெல்லாம் சேரும்
அழுகிவிடும் செடியதுவும் பழுதுபட வேரும்

ஒழிகின்ற பிறவியிது அறிந்துவிடு நெஞ்சே
அழிந்துவிடும் தீயினிலே அலையுமிந்த பஞ்சே
மண்கொண்ட உறவுமது  உண்மையெனத் தெரியும்
கண்மாயம் செய்ததென பின்நாளில் புரியும்

இன்பத்தை தேடித்தேடி அலையுமிந்த தேகம்
துன்பத்தின் பிடியினிலே சிக்கியும்தான் நோகும்
மெய் வாழ்வென நம்பி விரும்பிய யாரும்
பொய்யாகிட கலங்கி புலம்பியழ நேரும்

ஜெயம்
30-07-2022