சந்தம் சிந்தும் கவிதை

செல்வநாயகி தெய்வேந்த மூர்த்தி

காலமான தம்பியின் 45ம் நாள் நினைவில்
“””””””””””””””””””
சத்தியம் நீயடா!
“””””””””””””””
சாரு தாசனே சத்தியம் நீயடா
ஊரும் அறியும் உறவும் விளங்கும்
வேறு வேறு வேதனை கொண்டும்
மாறு சிந்தை மனமுனக் கில்லை

அன்பின் குடும்ப அகலது நீயாய்
இன்பஞ் சுரந்த ஈகைப் பிறப்பாய்
தந்தை பாரந் தாங்கிய தனயா
எந்தை ஏனோ ஈந்தான் சோகம்

நெஞ்சம் நிறைந்த நேசம் காட்டி
விஞ்சும் பரிவை விதைத்தாய் இங்கே
கல்விக் கென்றும் கல்யாணம் என்றும்
சொல்லிச் சொல்லிச் சுறுசுறுப் பானாய்

நற்புகழ் தந்த நல்மனத் தோனே
இற்றை நாளிங்கே இருந்திலை நீயே
அக்கம் பக்கம் அனைத்தி லுன்னுருவம்
இக்கணம் தெரிய ஏங்குது மனமும்

தங்க மகனே தமயனாய்த் தம்பியாய்
எங்குல விளக்கே எம்முயிர் மைந்தனாய்
இச்சைகள் தீர்த்த இன்முகத் தோனே
இச்செக வாழ்வை இழந்தது மேனோ?

சற்குரு போலே சாற்றிய தென்ன?
நற்றவ மைந்தா நமையேன் மறந்தனை
கற்ற வித்தையும் காதலின் தூய்மையும்
உற்ற போழ்தில் உனக்கேன் உதவலை?

கட்டிய கோட்டை கல்லெறி பட்டதே
பட்டறி விங்கே பயனிலா தானதே
விண்ணவர் உன்னை விரும்பிய தேனோ
கண்கவர் அழகா?கரிசனைச் செயலா?

நித்தம் உன்றன் நினைவால் வாடநாம்
சத்தம் இல்லாச் சமாதி யானதேன்?
கப்பிய கவலையும் கையறு நிலையும்
செப்பிடக் கேளாய் செங்கதி ரோனே