சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்தி தாசன்

எதிர்ப்பு அலை

எதிர்ப்பு அலை கேட்கிறது
எண்ண அலை அடிக்கிறது
ஏதேதோ ஓசைகள் ஓங்கி
எங்கேயோ மோதி விழுகின்றன

உள்ளதை இழந்து தவிக்கும்
நல்லதை வேண்டி ஏங்கிடும்
அல்லதை அகற்றிடவே இன்றி
சொல்லலை வடிவிலே எதிர்ப்பலை

தர்மம் வேண்டியொரு நீரலை
சுனாமியாய் எழுந்ததுவோ என்று
வினாவியே வியந்திடும் வகையில்
கனாவிலே உதித்ததுவோ எதிர்ப்பலை

சட்டங்கள் புல்லர் கைகளிலே
சாத்திரம் ஆகியங்கு முரண்டிட்டால்
எத்தகை ஆயுதம் கொண்டிட்டாலும்
இத்தகை எதிர்ப்பலை நின்றிடுமோ!

நியாயங்கள் தடம்மாறி போனால்
நீதிமுறைகள் தறிகெட்டு ஓடினால்
நிச்சயமாய் எழுந்திடும் ஒருநாள்
நிறுத்தமுடியாப் பேரிகை எதிர்ப்பலை

திரண்டிட்டார் மக்கள் ஓரணியில்
உணர்ந்திட்டார் வஞ்சகச் சூதுதனை
அஞ்சிடார் அடக்குமுறை அதிகாரத்துக்கு
எழுந்திட்டார் இன்றவர் பெருமெதிர்பலையாய்