சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

அன்பின் நண்பரே அன்றே அனுப்பியிருந்தேன்

உழைப்பாளி

உருண்டிடும் உலகினை உயர்த்திட
உழைத்திடும் உயர்ந்தவன் உழைப்பாளி
ஏறுடைக்கும் உழவர்தம் உழைப்பினால்
சோறுடைக்கும் மானிட வாழ்க்கையில்

உடம்புக்கு முதுகெலும்பே ஆதாரம்
உழைப்பாளியே நாட்டிற்கு முதுகெலும்பு
உகுத்திடுவார் செந்நீரை வேர்வையாய்
ஊற்றிடுவார் கண்ணீரை வாழ்வினிலே

உழைப்பினைச் சுரண்டிடும் வர்க்கம்
உழைப்பாளியின் மகிமை உணர்வதில்லை
உறிஞ்சிடும் உழைப்பின் உயர்வினை
உணர்ந்திட்டால் உழைப்பாளி உயர்ந்திடுவான்

அகிலத்தின் ஆரம்ப காலமுதல்
அழகுடனே மிளிர்ந்தின்று உயரும்வரை
அடிப்படை அத்திவாரமாய் உழைப்பாளியே
அவனின்றும் அதேபோல அடித்தளத்தில்

உழைப்பாளி வாழ்கவெனும் கூச்சலுடன்
உலகமெங்கும் பெரும் ஊர்வலங்கள்
உழைத்தவரின் வாழ்க்கையை உயர்த்த
உலகத்தோர் கரங்களெல்லாம் உயரட்டும்

மேதினம் என்பதோர் அடையாளமே
மேதினியில் உழைப்பாளி திண்டாட்டமே
மாற்றமொன்று கான்பதெல்லாம் மக்கள்
மனநிலையில் மாற்றமுண்டானால் மட்டுமே