கவிதை நேரம்-18.05.2023
கவி இலக்கம்-1690
மே 18 தமிழரின் அழிப்பு நாள்
—————————————
மறக்க முடியுமா தமிழர்களாக நாம்
சிவப்பு குருதி சிந்திய கறுப்பு நாள்
இன வெறியரால் கொன்ற தினத்தை
கொலைகார எதிரிகள் கொண்டாடிய நாள்
தமிழர் மனம் சோர்ந்து உடல்கள் பிரிந்த நிலை
நடைப் பிணமாக நகர்ந்து கடந்த நாள்
குடும்பமாக கூட்டமாக வந்த உறவுகளை
கொன்று குவித்த கரிய நாள்
செய்தியாக இணையத்தின் மூலமாக
பார்த்தும் கேட்டும் அறிந்தும் அழுத நாள்
குழி வெட்டிப் புதைப்பதற்கும் உறவின்றி
குடும்பத்தோடு அனாதரவாக சிதைந்த நாள்
நடப்பதற்கு தென்பில்லாமல் உணவுமின்றி
இறந்த உடல்களை கடந்து சென்று
உயிரை பாதுகாக்க ஓடி களைத்த நாள்
மூச்சிழந்த தாயின் மார்பில்
முகம் புதைத்து பால் குடித்த குழந்தை
முகம் பார்க்க தாய் பிரிந்த பாவப்பட்ட நாள்
வெள்ளைக் கொடி சுமந்து போனவர்கள்
சுட்டுப் போட்டு எதிரிகள் கொண்டாடிய நாள்
இரத்தம் வெள்ளமாக ஆறாய் ஓட
அனாதைகளாகி உயிரை தொலைத்த நாள்
மறக்க முடியுமா தமிழர்களின் அழிப்பு நாளை
காலங்கள் கடந்தாலும் இந்நாள் கறுப்பு நாள்