வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

பொசுக்கிய தீயும் பூத்திட்ட பொலிவும்..
யாழ்நகர் மத்தியிலே
வானுயர்ந்த கோபுரமாய்
வற்றாத சுரங்கமாய்
வரலாற்று நூலகமாய்
வான்மதியாய் மின்னியது
எண்ணற்ற தேட்டங்கள்
எழுத்தாளர் படைப்புகள்
ஏற்றத்தின் கல்விக்கு விளக்கான விருட்சமே
பொறிக்குள் பொசுங்கியதே
சாம்பல் மேடாகி சரித்திரத்தை புதைத்தது
நாற்பத்திரண்டாண்டு தீயே உனக்குள் தீராதபசிச் சுவாலை
வேரோடு தமிழினத்தை வீழ்த்திய விரக்தியே
மறக்கத்தகுமா மனிதத்தின் கொடூரம்
இனத்தையே உலுக்கியது ஈழமே அழுதது
தேடற்கரிய தேட்டத்தை இழந்தோம்
தேவையின் வலுவை திரட்டிய முனைந்தோம்
அடம்பன் கொடியென திரள்வதே மிடுக்கு
அவசியம் நூலகம் அவலத்தை உணர்ந்தோம்
புனரது அமைத்தே புதுநூலகம் எழுந்தது
வானுயர் வாகையில் வளமென மின்னுது
தேசத்தின் தேட்டங்கள் திசைகளில் தேடல்கள்
நிறைமதிக் கூடமாய் நிமிர்ந்திட்ட நூலகம்
எரிந்த சாம்பலில் எழும்பிடும் பினிஸ் பறவை போல்
நிமிர்ந்த கோபுரம் நீள்சரிதத்தின் உறைவிடம்!
நன்றி
மிக்க நன்றி.