மார்கழிநீர் ஆகலொடும் மன்பதைகள் தேடுமிறை
மனத்திருத்தி வணங்கவேண்டும்
வயல்மருங்கிற் கனலியவன் வந்துஒளி தருகின்ற
வைகறையும் இணங்கவேண்டும்
சீர்மலியத் தமிழவளின் சிந்தொடுதேன் காணுகின்ற
தென்றலிசை அணங்குவேண்டும்
தேவாதி தேவரெலாம் திருக்கயிலை மலையேறித்
துதித்தகவிப் பணியவேண்டும்
வேர்மலியத் திருவாரும் வேதமறை ஒலிக்கின்ற
வித்தகப்பொன் எழில்வேண்டும்
வீராதி வீரலொம் மானசரோவர் நன்நீரில்
மிதக்கின்ற பொழில்வேண்டும்
கார்மலியப் பெரும்மழையில் கனத்தபயிர் மண்ணினொடும்
கதிர்கொடுத்து மலரவேண்டும்
கம்பனுயர் தமிழ்பரப்பிக் கட்டுண்ட செந்தமிழில்
காவியத்தேன் இலங்கவேண்டும் !
தண்தமிழில் விண்கதவு தட்டியே திறக்கின்ற
தனிநாடு ஒன்றுவேண்டும்
சாராக மலைவெள்ளம் சரிந்தோட வைக்கின்ற
சந்நிதியார் மன்றுவேண்டும்
விண்தொட நிவர்ந்தமேனி விறல்வேந்தன் விநாயகன்சீர்
வேதநெறி தழைக்கவேண்டும்
விட்டிலெனப் போகாமல் தொட்டிலெனத் தாலாட்டும்
மௌவலொடும் அழைப்புவேண்டும்
கண்பனித்த அருள்மலரும் கண்மணியாள் நெறிஒளிரக்
கனகமண்ணின் சிறைவேண்டும்
காற்றினொடும் சம்பங்கி கண்டுநடம் பயிலுகின்;ற
கனமதுரைத் திறைவேண்டும்
பண்ணார்ந்த தேவியவள் பதஞ்சலிஐம் பூதமொடும்
பாடுமழைச் சரம்வேண்டும்
பாங்கெனவே உழைப்பிலிடும் பரந்தமார் கழியோடும்
பற்றும்நீர் வரம்வேண்டுமே !
வே.இராசலிங்கம்