வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

தொலைத்த இடத்தில் தேடுகிறோம்…
சுதந்திர தாகமும் சொந்தமண் வாழ்க்கையும்
இழந்திட்ட படகானோம் இலக்கிலே முகிலானோம்
முகவரி தொலைத்திட்டோம் முகமூடி புனைத்திட்டோம்

நில வாழ்வில் நிழல்போல் புலவாழ்வில் புதுமுகங்கள்
தொலைத்த இடத்தில் தேடுகிறோம்
தொடராய் வாழவே நாடுகிறோம்

அன்பை உளி கொண்டு செதுக்குகிறோம்
ஆற்றலை விதையிட்டு விளைச்சல் செய்தோம்
அன்னை மண்முகவரி தேடுகிறோம்
அடம்பன் கொடியெனத் திரண்டு நாம்
அல்லல் நீக்கவே பாடுபட்டோம்

உண்ணாநோன்பில் உருக்குலைந்து
உறவுகள் காக்க உயீர்ந்தார்
கல்லறைக்காவிய நாயகர் கருத்தரித்தே
மரணத்தை வீறுகொண்டார்
சொல்லொணத்துயரில் தாய்த்தேசம்
சுக்குநூறான வதைக்கோலம்

எல்லைகள் கடந்தும் ஏங்குகிறோம்
எத்தனை ஆண்டுகள் தேடுகிறோம்
எங்கே போனார்கள் ஏங்குகிறோம்
தொலைத்த இடத்திலே தேடுகிறோம்
தொடரும் இருளைப் புறந்தள்ளி
தொடர்வோம் விடியலின் வழிதேடி!
புலருமா புதுத்தேசம் மலருமா மறுவாழ்வு
தொலைத்த இடத்தில் தேடுகிறோம்.
தொன்மை வாழ்வையே நாடுகிறோம்!.
நன்றி