சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

23.05.23
கவி இலக்கம் -103
முள்ளி வாய்க்கால்

முள்ளி வாய்க்காலில் மூழ்கிய
சுவடுகள் முள்ளுக் கம்பியில்
முனகுதே

பத்து மாதம் சுமந்த தாயில்
பொத்தென விழுந்த கொத்துக்
குண்டால் உடல் கிழிந்து
சிசு வெளிவந்ததே

உதிரம் பீறி ஊறிட்ட தாயோ
உயிரோடு போராட
பால் குடிக்கும் சிசுவோ
மடியோடு திண்டாடிப்
பிழைத்துக் கொள்ளுதே

பள்ளிச் சிறுவர்,இளையோர்,
பெரியோர் என ஏவிய
எறிகணையால் உயிருடன்
எரிந்து சாம்பலானாரே

நரக வாழ்வுக்கு நீதி ஏது
உலக வல்லரசுக்கு அநீதி
பொது உழைப்பாகுதே

முள்ளி வாய்க்கால் தொடர்கதை
முடிவல்ல
கொள்ளி போடும் தன் இனமே
தடியடி கொடுக்க முடிவான
இடி ஒன்று வந்திடுமே .