வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ சுதந்திரமாமே “….கவி…ரஜனி அன்ரன் (B.A) 02.02.2023

சுதந்திர இலங்கையில் சுதந்திரமாம்
சொல்லி மகிழுது அரசும்
மெல்ல முடியாமற் தவிக்குது எம்மினமும்
சடுதியாக ஏறிவிட்ட விலைவாசி
ஒருவேளை உணவிற்கே திண்டாட்டம்
இந்தநிலையில் யாருக்கு சுதந்திரமாம் ?

நசுக்கப்பட்டவர்களின் ஏக்கமும்
பொசுக்கப்பட்ட உணர்வுகளும்
கட்டாயத் திணிப்புக்களும்
ஆதிக்ககாரரின் அடக்குமுறைகளும்
வல்லாதிக்கத்தினரின் வன்முறைகளும்
தகர்க்கப்படும் நாளே சுதந்திர நாளாம்
அதுவரை இல்லை சுதந்திரம் நமக்கு !

காணாமல் ஆக்கப்பட்டோர்க்கு
இன்றுவரை விடையில்லை
சிறையில் வாடுவோர்க்கு
விசாரணையுமில்லை விடுதலையுமில்லை
இந்த நிலையில் யாருக்குச் சுதந்திரம் ?
பேதங்கள் ஒழிந்து பிரிவினைகள் அகன்று
நியாயங்கள் வென்று சமத்துவம் மிளிரும்நாளே
யாவர்க்கும் பூரண சுதந்திரமாம்
அதுவரை இல்லை நமக்குச் சுதந்திரம் !