வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ மலையின் மாண்பு “ கவி…ரஜனி அன்ரன் (B.A ) 15.12.2022

வானம் குடைபிடிக்க
வையம் கம்பளம் விரிக்க
வைரப் போர்வை போர்த்தி
தலையில் கிரீடம் சூடி
வானளாவ உயர்ந்திருக்கும் மாமலையே
உன் மாண்பினைச் செப்பிட வார்த்தைகள் இல்லையே !

கானகத்தை காசினியைக் காக்க
நீ தூணாக நிற்கிறாய்
நோய் நொடிகளைத் தீர்க்க
மூலிகைகளைத் தந்து காக்கிறாய்
தாகம் தீர்த்திட அருவியாய் கொட்டுகிறாய்
மேகம் கூட மோகம் கொள்ளுது உன்னோடு !

இயற்கையின் அதிசயம் நீ
பிரமிப்பின் பிரவாகம் நீ
புரியாத புதிர் நீ பூமிப்பந்தின் கிரீடம் நீ
காற்றிற்கும் அஞ்சாத கல்நெஞ்சன் நீ
கல்லுக்குள்ளும் ஈரம் கொண்டவன் நீயே !

உனைப் பார்த்து நாம் வியக்க
பள்ளங்களைப் பார்த்து நீ நயக்க
நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் மலையே
மாமலையே உன் மாண்பு தான் என்னே !