வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ கல்வியெனும் கடல் “ கவி…ரஜனி அன்ரன் (B.A) 25.01.2024

உலகை மாற்றிடும் உன்னத சக்தி
எம்மையும் உயர்த்திடும் கருவி
அறிவொளியைத் தந்திடும் விளக்கு
அறியாமை இருளை அகற்றிடும் சுடர்
அதுவே கல்வியெனும் பெருங்கடல்
அனைத்துலக கல்வித் தினத்தை
அமுலாக்கித் தந்ததே ஐ.நா. மன்றும்
ஜனவரி இருபத்தி நான்காம் நாளை !

அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம்
அள்ளிச் செல்ல முடியாத செல்வம்
கொடுக்க கொடுக்க பெருகும் செல்வம்
அறிவுப் பெட்டகத்தினைத் திறக்கின்ற சாவி
அரும்பெரும் கல்விக் கடலே !

வாழ்க்கை முழுமை பெற
வாழ்வில் ஞானத்தைப் பெற
வாழ்வின் தேடல்களை விரிவாக்க
இலக்கினை நோக்கிப் பயணிக்க
வலக்கரமாய் இருப்பது
கல்வியெனும் பெரும் கடலே
கல்வியெனும் கடலுக்குள் நீச்சலடித்து
கல்விக் கரையினைத் தொட்டிடுவோம் !