வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ சகிப்பும் சவாலும் “….கவி….ரஜனி அன்ரன் (B.A)….16.11.2023

மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்த
ஆற்றல் கொண்ட அற்புதப் பண்பு சகிப்பு
சகிப்பினைத் தக்கவைக்க சவால்களோ பற்பல
அன்பு காதல் நட்பு தொடர வேண்டும் சகிப்பு
அமைதியைப் பேண ஆற்றலைப் பெருக்க
வாழ்வில் வேண்டும் சகிப்பு !

உலகம் சமூகம் என்ற ரீதியில்
நிலத்தினை அபகரிக்க நாட்டினைப் பிடிக்க
போராட்டங்கள் போர்கள் வெடிக்க
சவாலுக்கு மத்தியில் தவிக்குது சகிப்பு
மனித வாழ்வில் சகிப்பினைப் பேண
ஐ.நா.மன்றும் அமைத்துத் தந்ததே
நவம்பர் பதினாறாம் நாளை
அனைத்துலக சகிப்புத்தன்மை நாளாக !

மானுடத்தின் மேன்மை மனுக்குலப் பெருமை
மனிதரை மனிதர் மதிக்கும் மகிமை சகிப்பு
சின்னச்சின்ன தவறுகளைப் பொறுத்து
உணர்வுகளைக் கட்டுப்படுத்தி
சவால்களைச் சமாளித்தால்
சகிப்போடு வன்முறைகளுக்கு சமாதி கட்டி
வெற்றிப் பாதையில் பயணிக்கலாம் !