வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ வழிகாட்டிகள் “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 12.10.2023

அன்னை தந்தையை அடுத்து
அறிவொளியை எமக்குக் காட்டி
அறியாமையை அடியோடு அகற்றி
திறமைகளைக் கண்டுணர்ந்து
வற்றாத கல்விச் செல்வத்தை வாரித்தந்து
விழி திறக்க வைத்து
வாழ்வில் ஒளியேற்றிய
வழிகாட்டிகள் எம் ஆசான்களே !

பள்ளியின் இருப்பிற்கும்
மாணவர் உயர்விற்கும்
தேச வளர்ச்சிக்கும்
தேர்வின் வெற்றிக்கும் அச்சாரமாகி
கற்றலின் வித்தைகளைக் கச்சிதமாக்கி
அற்புதமாய் அள்ளித் தந்து
கல்வி ஒளியூட்டிய வழிகாட்டிகள் ஆசான்களே !

கல்வியொடு ஒழுக்கத்தையும் பண்பினையும்
கண்ணியமாய் எமக்களித்து
வெற்றுத் தாளாய் இருந்த எமை
புள்ளிக்கோலம் போட வைத்து
அழகு பார்த்த ஆசான்களே – நீவிர்
பண்ணிய தியாகங்கள் எண்ணிலடங்கா
ஒளியூட்டிய வழிகாட்டிகளே நன்றி உமக்கு !