வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

எழுத்தறிவு இல்லையெனில்…..கவி…ரஜனி அன்ரன் (B.A) 07.09.2023

மொழிக்கு மூலாதாரம் எழுத்தே
எழுத்தே மொழிக்கு அணிகலன்
சமூகத்தின் ஆணி வேரே எழுத்தறிவு
மொழி பேசும் இனம் அழியாமல் இருக்க
எழுத்தறிவே அவசியம்
எழுத்தறிவு இல்லையெனில்
மொழியே அழிந்து விடும் !

பட்டறிவு பகுத்தறிவு பக்குவம் இருந்தாலும்
அறிவினைப் பெருக்க ஆற்றலை வளர்க்க
இலக்கினை அடைய இமயமாய் உயர
தகுதியைப் பெற தராதரத்தோடு வாழ
வேண்டும் எழுத்தறிவு !

எந்த மொழி என்றாலும்
எழுத வாசிக்க புரிந்துகொள்ள
தெரியாத நிலையே எழுத்தறிவின்மை
வறுமை போர்ச்சூழல் அரசியல் நெருக்கடிகளால்
தலைவிரித்தாடுகிறது எழுத்தறிவின்மை !

இணையவழி முன்னேற்றம் கணணிப் பயன்பாடு
உலகமயமாக்கல் தொழில்நுட்ப அபாரமென
நிறைவான காலகட்டத்தில் எழுத்தறிவின்மையென்பது
வெட்கப்பட வேண்டிய விடயமே !