வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ வலிசுமந்த நாள் “…கவி…ரஜனி அன்ரன் (B.A) 18.05.2023

பெருவலி சுமந்து பேரிடர் நடந்து
மாறாத வடுவாகி மனதில் ரணமாகி
மேகக் கூட்டம் கரும்புகையாகி
மேதினியே உறைந்து நின்ற
மே பதினெட்டாம் நாள்
ஆண்டுகள் பதினான்கு ஆனபோதும்
ஆறவில்லை இன்னும் காயங்கள் !

முள்ளி வாய்க்காலில் மூச்சடங்கியவர்க்கு
முத்தான சொந்தங்களை தொலைத்தவர்க்கு
உறுப்புக்களை உடமைகளை இழந்தவர்க்கு
உறுதுணையாக வேண்டும் நீதி
உரிமைகளுக்கு வேண்டும் தீர்வு
தொடர்கிறது நீதிக்கான போராட்டமும்
கிட்டவில்லை இன்னும் தீர்வுகளும் !

சிறைக் கைதிகளை மீட்டிட
மனக் காயங்களை ஆற்றிட
காணாமற் போனோரை மீட்டிட
ஒட்டுமொத்த உறவுகளும் ஒன்றுகூடி
ஒற்றுமையோடு குரல் கொடுத்து
நீதிக்காய் போராடி வீதியில் நிற்போர்க்கு
மடிந்த உறவுகளுக்கு வலிசுமந்த நாளில்
விடிவொன்று கிடைத்திட வழிசெய்வோம் !