வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ என் வகுப்பறை ஆளுமைகள் “ ….கவி….ரஜனி அன்ரன் (B.A ) 06.10.2022

எண்ணச் சிறகை விரிக்க
வண்ணக் கனவுகளை நனவாக்க
அறிவுத் திறனைப் பெருக்க
ஆளுமைகளை நிலைநாட்ட
ஆதாரமாய் கை கொடுத்து
அர்ப்பணிப்போடு செயற்பட்ட – என்
ஆசான்களைப் போற்றி மகிழ்வேன் எந்நாளும் !

அறியாமையை விலக்கிய அரங்கம்
அறிவிற்கு விருந்து தந்த அறிவுச்சாலை
கவலைகளை மறக்க வைத்த கல்விச்சாலை
நல்லொழுக்கம் கற்றுத்தந்த கூடம்
நட்பிற்கு நல்லுறவான மாடம்
பன்னிரெண்டு ஆண்டுகள்
பொறுப்போடு எனைச் சுமந்த வகுப்பறை
பொக்கிஷமே என்றும் எனக்கு !

வகுப்பறை நினைவுகள் அலைமோத
வகுப்பு ஆசான்கள் முகமும் மனதில் நிழலாட
வகுப்பில் மாணவ தலைவியானதுவும்
தேர்வுகளில் வெற்றி பெற்றதுவும்
தேர்ச்சி அறிக்கையில் எப்போதும் மூன்றுக்குள் வந்ததுவும்
பேச்சு கட்டுரை போட்டிகளில் பங்கு கொண்டதுவும்
வெற்றி பெற்று மகிழ்ந்ததுவும்
பட்டப் படிப்பிற்கு தெரிவானதும்
வகுப்பறையில் என் ஆளுமைகளே
ஆளுமைகளைத் தந்த என்ஆசான்களே நன்றி நன்றி !