வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ பன்மொழிகளே பலம் “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 29.09.2022

பன்மொழி போற்றும் புரட்டாதித் திங்கள்
பாங்குடனே விடைபெறும் வேளை
பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாளாம்
புரட்டாதித் திங்கள் முப்பதாம் நாளை
பல்லுலகிற்கும் அறிவித்து மகிழுது ஐ.நா.மன்றும் !

எண்ணத்தின் வெளிப்பாடாகி சிந்தனையின் ஊற்றாகி
உணர்வின் கலவையாகி உன்னதமாகி
தொடர்பாடலுக்கும் பரிமாறலுக்கும் பாலமாகி
மொழியப்படுவதே மொழி
பன்மொழிக் கல்வி புரிதலை ஊக்குவித்து
நல்லுறவிற்கு வழி வகுக்குமே
வாழ்வியல் மொழி தாய்மொழி – என்
வாழ்விட மொழியோ டொச்மொழி !

பல்லின மக்கள் வாழும் புலத்து வாழ்வினில்
பல்லினக் கலாச்சாரமும் மிளிர
பன்மொழிகளை நாமும் கற்றால்
பலதையும் பத்தையும் அறியலாம்
பயனுறு வாழ்விற்கும் வலுவாகும்
பன்மொழிகளே எமக்குப் பலம்
பன்மொழிகளையும் கற்போம்
தாய்மொழியோடு வாழ்வோம் !