“ தேடும் விழிகளுக்குள் தேங்கிய வலி“ கவி……ரஜனி அன்ரன் (B.A) 25.08 .2022
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடி
வலி சுமந்த ஏக்கப் பெருமூச்சோடு
வலுவிழந்த போதும் வல்லமையோடு
இரண்டாயிரம் நாட்களையும் தாண்டி
இரத்த பந்தங்களுக்கான போராட்டம்
இடைவெளியின்றி தொடர்கிறது தீவிரமாய்
தேடும் விழிகளோ தேங்கிய வலிகளோடு !
பெருவலி சுமந்த பேரிடர் காலமதில்
ஊசலாடும் உயிரையும் கையில் பிடித்தபடி
உறவுகள் வருவார்கள் எனும் நம்பிக்கையில்
தேடும் விழிகளிலே வலிகளைத் தேக்கமாக்கி
விழிகள் ஒளியிழக்க வதனம் களையிழக்க
துக்கம் மனதை வாட்ட தூக்கத்தைத் தொலைத்து
ஏக்கத்தோடு தொடர்கிறதே காத்திருப்பும் வலிகளோடு !
கண்துடைப்பிற்காக காணாமற் போனோர் அலுவலகம்
காட்சிக்காய் திறப்பு சாட்சிகள் எதுவுமில்லை
விடிவொன்று தான் கிட்டிடுமா?
இடிதாங்கியாய் நிற்கின்றனர் உறவுகள்
முடிவில்லாத துயர நிகழ்விது
முடிவொன்று தானும் வருவது எப்போது ?
தேடும் விழிகளுக்குள் தேங்கிய வலிகளைச் சுமந்தபடி
வாடுகின்றார் மக்கள் கரம் கொடுப்போம் நாமும் !