“ உலகாளும் நட்பே “……கவி……ரஜனி அன்ரன் (B.A) 28.07.2022
உறவுகளில் அற்புதமான ஆழமான உறவு
உணர்வோடு கலந்த உன்னத உறவு
உன்னத வாழ்விற்கு பலம் சேர்ப்பது நட்பே
உலகாளும் நட்பிற்கு ஓர் தினத்தை
உயர்வாக்கி உரம் கொடுத்ததே ஐ.நா.மன்றும்
உன்னத யூலை முப்பதாம் நாளை !
மலர்ந்து விட்ட மலரைப் போல்
மகரந்த துகளைப் போல்
மாசு மறுவற்றதே தூய நட்பு
எல்லைகள் கடந்த உறவு
எதிர்பார்ப்பு இல்லா உறவு
எமக்காகத் துடிக்கும் இதயம்
எங்கிருந்தோ வந்த உதயம்
உலகாளும் நட்பே வரமாகக் கிடைத்த உறவு !
உதரத்தில் பிறந்திடாத பந்தம்
உதிரத்தில் கலந்திடாத சொந்தம்
உற்ற நேரத்தில் கைகொடுக்கும் உறவு
பற்றிப் படர்ந்து கொடியாகித் தாங்கும் உறவு
பற்றுடனே எம் வாழ்வோடு பயணிக்கும் உறவு
தோழமையோடு தோள் கொடுக்கும் உறவு
தோல்விகளில் கை தூக்கிடும் உறவு
உலகாளும் உண்மை நட்பென்ற நல்லுறவே !