“ இசையின்பம் “….கவி….ரஜனி அன்ரன் (B.A)……30.06.2022
இசைக்கெனத் தனிமொழி இதுவரையில்லை
இசையே எமை அசைய வைக்கும் அற்புத மூலிகை
இசையின்றி நாமில்லை இசையின்றி எதுவுமில்லை
இன்ப உலகிற்கு எமை அழைத்துச் செல்வதும் இசையே
இறைவனை அடையும் எளிய வழியும்
செவிக்கு இனிமையைத் தருவதும்
கவிக்கு ஓசை நயத்தைக் கொடுப்பதும் இசையே !
உலகின் பொதுமொழி இசையே
உலக இசைநாள் ஜூன் இருபத்தியொன்றை
உலகே கொண்டாடி மகிழ
உலக இசைநாளின் தாய்வீடாக
உரிமம் பெற்றதே பிரான்ஸ் நாடும்
உன்னதமாக கொண்டாடியதே இசைத்திருவிழாவையும் !
பண் இசைத்துப் பாடும் தேவாரம்
இசையின் முதல் ஆதாரமே
இன்னிசையாய் ஏழிசையாய்
இறைவனைப் போற்றி மகிழ்தல் தமிழ்மரபு
முத்தமிழுக்கு முதன்மை கொடுத்து
இசைத்தமிழாய் நின்று பெருமை சேர்ப்பது இசையே
பிறப்புத் தொட்டு இறப்பு வரை
இசையோடு பயணிக்கிறதே எம் வாழ்வும்
இசையின்பத்திற்கு ஈடிணை எதுவுமில்லையே !