வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ அன்றிட்ட தீ “….நிழலாடும் நினைவுகள்…கவி….ரஜனி அன்ரன் (B.A) 09.06.2022

குன்றின் தீபத்தை குடாநாட்டின் கலசத்தை
கலாச்சாரத்தின் சின்னத்தை கலங்கரை விளக்கை
அறிவின் பொக்கிஷத்தை அனலுக்குள் பொசுக்கி
அழித்தாரே நீசர்கள் ஆண்டுகள் நாற்பதும் கடந்ததே
அன்றிட்ட தீ இன்று வரை நிழலாடும் நினைவுகளே !

நூலக எரிப்பு நுண்மையின் அழிப்பு
தேடற்கரிய தேட்டங்கள் இழப்பு
அறிவின் அற்புதம் உறைந்த இடம்
ஆயிரமாயிரம் மேதைகள் உருவான தளம்
ஆசான்கள் காட்டிய வழித்தடம்
அறிவுப் பசி தீர்த்த அமுதகூடம்
அன்றிட்ட தீயில் பொசுங்கிய போதும் – இன்று
அதேயிடத்தில் பூத்துக் குலுங்குது புதுப்பொலிவோடு !

காலத்தின் விரைவில் கடுகதி உலகில்
கணணி யுகத்தில் தொழில்நுட்ப வேகத்தில்
அறிவின் வளர்ச்சியோ அசுர வேகத்தில்
கையுக்குள்ளே உலகம், விரலுக்குள்ளே வித்தகம்
நூலகத்தை நாட வேண்டிய தேவையுமில்லை
தட்டி விட்டால் வருகிறது தகவல்கள் – இப்போ
நூலகங்கள் கணணிக்குள் கைத்தொலைபேசிக்குள் அடக்கம்
ஆனாலும் அன்றிட்ட தீ இன்றுவரை நிழலாடும் நினைவுகளே !