“ நிலைமாறும் பசுமை “……கவி….ரஜனி அன்ரன் (B.A) 12.05.2022
பசுமை போர்த்திய பூமி இன்று
பொலிவிழந்து தவிக்குது
இயற்கையின் வனப்பு இன்று
நிலைகுலைந்து நிற்குது
வீடுகளை அமைக்க வீதிகளை விரிவாக்க
காடுகளை அழித்து பசுமையின் வனப்புக்களை
கண்டபடி அழிக்கின்றார் கயவர்கள்
வெறுமை குடிகொள்ள பசுமையிங்கு நிலைமாறுதே !
இளைப்பாற நிழல் தரும் குடைகளாய்
உண்ணக் காயாய் கனியாய்
பலதையும் தரும் பயனுறு தருவாய்
பறவைகளின் வாழ்விடமாய்
பிராணவாயுவின் உற்பத்திச் சுரங்கமாய்
குளிர்ச்சி தரும் நிலவாகி காற்றினைச் சுத்தமாக்கி
எமை வாழவைக்கும் தாவரங்களைப் பேணிடுவோம் என்றும் !
சாமரம் வீசிடும் தாவரங்களை
சுற்றுச் சூழலை அழகாக்கும் தருக்களை
மழையின் விதைகளை மண்ணின் வேர்களை
மூச்சின் ஆதாரத்தை மூலிகைகளின் மூலாதாரத்தை
உணவின் உற்பத்திச் சாலையை – என்றும்
உரிமையோடு பேணி பசுமையைப் பாதுகாப்போம் !