“ இளவேனிலின் இளவரசியே “….கவி….ரஜனி அன்ரன் (B.A)….14.04.2022
இளவேனிற் காலத்து இளவரசியே
இதமான வசந்த ராகமே
தமிழ் மாதங்களில் முதலாகி
பிரம்ம தேவனின் படைப்பாகி
அம்பிகை அவதரித்த அற்புதத் திங்களாகி
அத்தனை சிறப்பையும் பெற்ற
சித்திரை மலரே சிங்கார எழிலே
சித்தம் குளிர உன்வரவு நல்வரவாகட்டும் !
ஆண்டிற்கு ஆண்டு புத்தம் புதிதாய்
பூத்து வரும் பூவையே
நித்திலத்தில் நீ மலரும் வேளை
வரலாறு காணாத ஆர்ப்பாட்டம் – உனை
வரவேற்க முடியாத அவலம்
தாய்நிலத்து மக்களின் வாழ்வியலில் அனர்த்தம்
இளவேனிற் காலத்தின் இளவரசியே பாரம்மா
இத்தனை துயரமும் எம்முறவுகளுக்கு ஏனம்மா ?
விலைவாசி உயர்வு பசி பட்டினி
பணவீக்கம் பால்மாவிற்கும் தட்டுப்பாடு
வீதிகளில் மக்கள் வரிசையில் காத்திருப்பு
காத்திருப்பிலும் சிலர் உயிர் துறப்பு
நீதியோடு நிம்மதியை அளித்திடம்மா
நாதியின்றித் தவிப்போர்க்கு கை கொடுத்திடம்மா !