வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ தமிழிசை “….கவி……ரஜனி அன்ரன் (B.A) 24.02.2022

இசை ஒருகலை இசைய வைப்பது இசை
இசைத்தமிழாய் வாசம் செய்யுது தமிழிசை
நோய்க்கு மருந்தாக நொந்த உள்ளங்களுக்குத் தெம்பாக
மனதிற்கு மகிழ்வாக மங்கலத்திற்கு துணையாக
மதுரத் தமிழுக்கு மகுடம் சூட்டியது தமிழிசை !

உலக மொழிகளை இசை வாசம்செய்தாலும்
இசைத்தமிழாக இசைந்து நின்று
தமிழை இசைக்கிறது தமிழிசை
தமிழரின் பாரம்பரிய இசை தமிழிசை
தமிழிசைக்கு இலக்கணம் வகுத்தது அகத்தியம்
தமிழிசையைப் பட்டை தீட்டியது பரிபாடல் !

செம்மொழிக்கு செழுமை சேர்த்தது ஏழிசை
பரமனைப் புகழ்ந்து பாட பண்ணிசை
பண்ணுக்கு இனிமை சேர்க்க இன்னிசை
பாவினத்தை வனப்பூட்ட தாழிசை
பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பது தமிழிசை !

தாலாட்டோடு தொடங்கும் மனிதவாழ்வு
சீராட்டுக்களோடு இசையோடு இசைந்து
மிடுக்கோடு பாசுரங்களில் பண்ணாகி
பரிமாணத்தோடு இசையாய் பாடலாய் கூத்தாய் பயணித்து
இறுதி நீராட்டு இசையோடு முழுமை பெறுகிறதே மனிதவாழ்வு !