சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீஸ்வரன்

விருப்பு

உள்ளத்தில் தோன்றும்
உணர்வே விருப்பு
உயர்த்தும் தாழ்த்தும்
அடிக்கடி உதித்து

கனவிலும் நினைவிலும்
உலவும் கால்பதித்து
மனதையும் உருக்கும்
முயலென நெருக்கி

கதைபல வீசும்
களமதில் குதித்து
எதையெனச் சொல்வேன்
இங்கு எடுத்து

புத்தரின் விருப்பினாலே
பூத்தது ஞானம்
பூண்டது அதனால்
பூமியும் புதுக்கோலம்
சித்தரும் கொண்டார்
சிந்தையால் சிவத்தியானம்
சித்திகளைப் பெருக்கிச்
சிந்தியது சிவயோகம்

கர்த்தரின் விருப்பே
கழற்றியது தீதை
காட்சியும் ஆனது
கண்களுக்குச் சிலுவை
மீளவும் நிகழ்ந்தது
அவரின் எழுகை

எத்தரின் ஆசையோ
எறிந்திடும் மாசை
சுத்தமும் போகும்
சுகமும் சாகும்

சீதை, இராமன்
கொண்ட விருப்பால்
மிதிலை கண்டது வில் வெடிப்பு
இராவணன் ஆசையாலேயே
வெடித்தது ராம நெஞ்சு
துடித்தாள் சீதைக்குஞ்சு
தாவினான் அனுமன்
தழுவியது தீ

சீதையின் விருப்பினாலே
திண்டது அவளைத் தீ
பாதையிட்டது இராம நீதி
பழுக்கொடுத்தது பாமரச் சதி

கம்பனின் விருப்பினாலே
கண்டோம் காவியம்

மீனவன் விருப்பாலேயே
மிதந்தோடும் படகு
அகப்படா விருப்பால்
அலைந்தோடும் மீனும்
அகப்படின் அதுவும் அல்லாடிச் சாகும்
அடுத்தவர் ஆசைக்காய்
அடுப்பினிலே வேகும்.

மனோகரி ஜெகதீஸ்வரன்
பதியவில்லை