மலைப்பு
அன்னையே தெரோசா நீயோர் புதினம்
கன்னியிடம் தாய்மை கருவிட்ட புனிதம்
புன்னகையே உந்தன் உறவுச் சின்னம்
பூத்தது அதனால் பூமியில் மனிதம்
புகுந்ததே உன்னில் சேவை எண்ணம்
புறமேகாது நின்றதே ஆற்றும் திண்ணம்
அறமோங்கி ஆறியதே
அதனால் மண்ணும்
உதித்தது உன்னில் உயிரோம்பு பிடிவாதம்
உள்நின்று உதைத்த அன்பே அடிநாதம்
பதித்தாய் இந்திய மண்ணில் பாதம்
பழிசுமத்தச் செய்தார் பாவியர் விவாதம்
உமிழ்ந்தும் விரட்டிச் செய்தார் பாவம்
மன்னிப்பும் மன்றாட்டமுமே உந்தன் பாவம்
ஆக்கினை செய்தவரே
பெற்றார் அவமானம்
அவருக்கும் கொடுத்தாய் மன்னிப்பு வெகுமானம்
அருளுற்றிய அன்னையே நீயோர் அவதாரம்
அடுத்தவர் பெறவில்லை உன்னால் சேதாரம்
தடுத்தவரும் தந்தார்
தாமுவந்து பலதரம்
எடுத்துத்தர வைத்தது எழிரசியே உந்திறன்
சேரி சிரிக்கச் செய்தாய் ஆட்சி
சேராமலே சென்றது செய்தவர் சூழ்ட்சி
அவகதி கண்டோரும் அடைந்தார் மீட்சி
அந்தரங்க சுத்திக்கு
அனைத்துமே சாட்சி
சுதந்திரமாயே கொடுக்கின்றாய்
அன்னையாய் காட்சி
சுட்டிடத் தொட்டிட முடியாததே உந்தன் மாட்சி
கொட்டிய அன்பால் கொள்ளையிட்ட அன்னையே
மலைத்தே நிற்கிறேன் உந்தன்
வாழ்க்கை கோலம் உணர்ந்து
மனோகரி ஜெகதீஸ்வரன் .