சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீஸ்வரன்

பசுமை

உறைகழன்று வித்து முளைக்க
உருவெடுக்கும் பசுமை உலகில்
தரையிலிடு பசளை உண்டு
பயிருயரப் படரும் பசுமை
தரைநிறைத்துப் பயிரும் செழிக்க
தனைநிறுத்திச் சிலிர்க்கும் பசுமை
குறைகழற்றி உயிர்கள் வாழக்
குவிந்தாட வேண்டும் பசுமை

நீர்நிலைகள் நீரை இறைக்க
நின்றாடும் பசுமை உலகில்
கார்மழையும் பெய்து நிறைக்க
கனதிகாட்டும் பசுமை நனைந்து
பார்ப்பரப்புத் தொட்ட கதிரால்
பழுப்பேறக் குன்றும் பசுமை
வேர்விடலில் தொடங்கும் பசுமை
வெந்தழிதல் முறையோ சொல்லு

தலைவிரித்து ஆடும் மரங்கள்
தந்துதானே செல்லும் விதைகள்
குலைகொடுக்கும் வாழை என்றும்
குட்டியீன்று தானே வீழும்
தலைமுறையைக் காக்கப் பயிர்கள்
தருமிவற்றை நுணுகிப் பாரும்
தலைமுறைக்காய் பசுமைக் காப்பு
தந்திடலே அவரின் நோக்கு