சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீசன்

குழலோசை

மூச்சுக் காற்றை வாங்கி தடவும் விரலைத் தாங்கி புல்லாங்குழல் தள்ளும் ஓசை
புரிந்திடச் சொன்னேன்
அதுவே குழலோசை

கேட்பீரோ எந்தன் குரலோசை
கேட்டீரோ கண்ணன் குழலோசை

மொட்டு மனமும் சிரிக்கும்
கட்டு விட்டு
பட்ட மனமும் துளிர்க்கும்
கொட்டும் குழலோசை மெட்டால்

நாடி நரம்புகள் சிலிர்க்கும்
நாளையென்ற நினைவும் மறக்கும்

மெத்தையென உடலும் மிதக்கும்
மோக முள்ளும் நழுவும்
மோகனம் வந்து தழுவும்
நத்தையென உணர்வும் ஊரும்
நிம்மதியே நிகழ்வெனக் கூறும்
நிகழ்த்தியவர் யாரென்றும் அறியும்

தன்வினை கழன்று ஓடும்
ஆனந்த சுகமே சூழும்
பரமானந்தப் பயில்வே நிகழும்

மேயும் பசுக்களும் நாமே
மேய்ச்சல் மறந்து
சாயும் செவியால் சுரத்தை ரசிப்பவரும் நாமே

ராதை கோபியராயே ஆவோம்
கண்ணன் குழலோசைக்கே சாய்வோம்
அவனருளையே எங்கும் பாயச்செய்வோம்

மனோகரி ஜெகதீஸ்வரன்