சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 201
22/11/2022 செவ்வாய்
“கனவு மெய்ப்பட வேண்டும்!”
—————————————
அன்பும் அறனும் பொங்கிட வேண்டும்!
அகிலம் எங்கணும் அமைதியும் வேண்டும்!
ஆற்றலும் திறமையும் ஓங்கிட வேண்டும்!
ஆள்பவர் நெஞ்சில் நேர்மையும் வேண்டும்!

இல்லாமை இல்லா தொழிந்திட வேண்டும்!
இயற்கையும் தடையின்றி வழங்கிட வேண்டும்!
ஈகையும் தொண்டும் இணைந்திட வேண்டும்!
ஈவும் இரக்கமும் குறைவின்றி வேண்டும்!

உண்மையும் நேர்மையும் ஒன்றாக வேண்டும்!
உள்ளத்தில் தூய்மை உதித்திட வேண்டும்!
ஊரையும் உலகையும் உயர்த்திட வேண்டும்!
ஊஞ்சலாடா மனம்- உனக்கது வேண்டும்!

எதிலும் ஏற்றம் கண்டிட வேண்டும்!
எல்லா நன்மையும் பிறர்க்கும் வேண்டும்!
ஏழ்மை இல்லா உலகும் வேண்டும்!
ஏற்பதைக் கண்டு இகழாமை வேண்டும்!

ஐயம் களைந்து வாழ்ந்திட வேண்டும்!
ஐம்பெரும் புலன்கள் அடக்கிட வேண்டும்!
ஒழுக்கம் நன்றே பேணிட வேண்டும்!
ஒருத்திக்கு ஒருவன் அமைந்திட வேண்டும்!

ஓமெனும் ஓங்காரம் ஒலித்திட வேண்டும்!
ஓயாமல் நாளும் உழைத்திட வேண்டும்!
ஔவியம் பேசுதல் தவிர்த்திட வேண்டும்!
ஔடதம் இன்றி வாழ்ந்திட வேண்டும்!

நன்றி
மதிமகன்