சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:210
14/02/2023 செவ்வாய்
“ஊக்கி”
———
இருவகை “ஊக்கிகள்” இங்குண்டு
இருப்பதை உயர்த்திடும் ஒன்றுண்டு
திரண்டதைத் தீச்சிடும் மற்றொன்று
தீர்க்கமாய் அறிந்திடு நீ நன்று!

இலைமறை காயாய் இருப்போரக்கும்
இலக்கினை அடைய துடிப்போர்க்கும்
கலங்கரை விளக்கமாய் அமைந்தங்கு
கரையினைக் காட்டுவது “ஊக்கிகளே!”

அணையும் கூட்டம் தீதானால்
அனைத்தும் அழிந்து போவதற்கு
துணையாய் இருந்து கெடுப்பதுவும்
தூய்மை யற்ற “ஊக்கி” களே!

செய்வது எதுவென்று அறியாது
சேர்ந்த கூட்டத்தின் “அறிவுரையில்”
மெய்யதைச் சுட்டுக் கொண்டவரின்
மேன்மையை அழிப்பதும் “ஊக்கிகளே!”

நல்லது செய்யும் “ஊக்கி” யுடன்
நலமற்ற செய்திடும் ஊக்கியுண்டு!
உள்ளதை உணர்ந்து நாம் வாழின்
உலகினில் “ஊக்கி” பயன்படுமே!
நன்றி
மதிமகன்