சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்து சந்திப்பு
வாரம் 240
31/10/2023 செவ்வாய்

மாவீரனே!
—————
கார்த்திகை இருபத்தேழு மாலை
கதிரோன் சாய்ந்திடுமவ் வேளை,
ஊர்த்திருக் கோவில் எங்கும்,
உமக்கென மணிகள் ஒலிக்கும்!

சந்தனப் பேழையுள் துயிலும்,
சாதனை வீரர் உமக்காய்,
சொந்தங்கள் வந்து நிற்பர்!
சுடர் விளக்கேற்றி வைப்பர்!

புலம்பெயர் தேசம் தோறும்,
பூவால் உம்மை அர்ச்சிப்பர்!
கலங்கிய உள்ளத் துடனே,
கால்கடுக்க நின்று நோற்பர்!

சட்டியில் தீபம் ஏற்றுவர்!
சந்ததம் உம்மைத் தொழுவர்!
பெட்டியாம் மனதில் வைப்பர்!
பேர்புகழ் எல்லாம் பகர்வர்!

ஈரேழு வருடம் கடந்தும்,
இங்கு எதுவும் காணோம்!
பாரிடம் சென்று கேட்டும்,
பகலது விடியக் காணோம்!
நன்றி
மதிமகன்